விசாரணை நடத்திய ஆய்வாளருடன், தபால்காரரை ஊராட்சி அலுவலகத்தில் சிறைபிடித்த பொதுமக்கள்
பணமோசடியில் ஈடுபட்டதாக தபால்காரரிடம் விசாரணை நடத்திய ஆய்வாளரையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் தபால்காரர் ஒருவர், அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அஞ்சலகத்தின் ஆர்.டி. திட்டம், சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக பணம் வசூலித்தாக தெரிகிறது. ஆனால் வசூலித்த பணத்தை அவர் முறையாக அஞ்சலகத்தில் செலுத்தாமல், மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அஞ்சலக ஆய்வாளர் ஒருவர் தபால்காரரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த கோனேரிப்பாளையத்திற்கு சென்றுள்ளார். தபால்காரர் வசூலித்த பணத்தை மோசடி செய்ததாக அறிந்து திரண்ட வந்த பொதுமக்கள், மதியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து தபால்காரரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த அஞ்சலக ஆய்வாளரையும் சேர்த்து உள்ளே வைத்து கதவை பூட்டு போட்டு பூட்டி சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தபால்காரரையும், அஞ்சலக ஆய்வாளரையும் பொதுமக்கள் இரவு வரை விடுவிக்காததால் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசார் பொதுமக்களிடம் தபால்காரர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் அஞ்சலக துறை அதிகாரிகளை வைத்து பேசி பிரச்சினையை முடித்து கொள்ள வேண்டும், என்றனர். மேலும் தபால்காரரிடம் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சலக துறை அதிகாரிகளும், போலீசாரும் கூறியதை தொடர்ந்து தபால்காரரையும், அஞ்சலக ஆய்வாளரையும் பொதுமக்கள் விடுவித்தனர். தபால்காரரிடம் தொடர்ந்து அஞ்சலக துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story