யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை


யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
x
தினத்தந்தி 21 Jun 2021 9:04 PM GMT (Updated: 21 Jun 2021 9:04 PM GMT)

குமரி மாவட்டத்தில் தென்னை மரத்தை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட யானையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டது.

அழகியபாண்டியபுரம்:
குமரி மாவட்டத்தில் தென்னை மரத்தை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட யானையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
யானை அட்டகாசம்  
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உடையார்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காட்டு யானை வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகளில் புகுந்து சேதப்படுத்தியது. தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசியது. இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். 
பின்னர் யானை மீண்டும் அந்த பகுதியில் புகாதவாறு அகழி வெட்டப்பட்டது. இதையடுத்து அந்த யானை திடல், ரத்தினபுரம் போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்து தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. அட்டகாசத்தில் ஈடுபட்ட யானையை அழகியபாண்டியபுரம் வனச்சரக மணிமாறன் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது, அது வயது முதிர்ந்த பெண் யானை என்பதும், நோயுற்று இருப்பதும் தெரிய வந்தது. யானையின் பின்பகுதியில் பெரிய புண்கள் காணப்பட்டன. 
மயக்க ஊசி செலுத்தப்பட்டது
மேலும், திருநெல்வேலி மண்டல வனத்துறை கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து யானையை கண்காணித்தனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கலாமா? என ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்ட வன கால்நடை மருத்துவப் பிரிவு டாக்டர் மனோகரன், தேனி மாவட்ட வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினரும், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் திடல் பகுதியில் முகாமிட்டனர். அவர்களுடன் மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், உதவி வன பாதுகாவலர் அகில் தம்பி, சிவகுமார் மற்றும் அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் ஆகியோரும் உடன் சென்றனர். ஆலோசனைக்கு பிறகு, மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி யானைக்கு  துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்த யானையின் கால்களை கட்டி போட்டனர். 
சிகிச்சை
தொடர்ந்து யானையின் உடலில் இருந்த புண்களில் மருந்து போட்டு சுத்தப்படுத்தினர். மயக்கம் சற்று தெளிந்த நிலையில் யானை கீழே படுக்காமல் நின்று கொண்டிருந்தது. அது மிரண்டு ஓடாதபடி கண்களில் துணி போட்டு மறைக்கப்பட்டிருந்தது. 
சிகிச்சை முழுமையாக முடிந்தவுடன், மயக்கம் தெளிய வைத்து வனப்பகுதிக்குள் யானையை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story