அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன


அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன
x
தினத்தந்தி 21 Jun 2021 9:11 PM GMT (Updated: 2021-06-22T02:41:50+05:30)

குமரி மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் பகலில் கடைகள் திறக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் பகலில் கடைகள் திறக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியது.
கூடுதல் தளர்வுகள்
தமிழக அரசு ஊரடங்கை நேற்று முதல் 28-ந்தேதி காலை 6 மணி வரை மேலும் சில தளர்வுகளுடன் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி  நாகர்கோவில் நகரில் தனியாக செயல்படும் காய்கறிக் கடைகள், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் நேற்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன. சாலையோர பூ மற்றும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன. 
குமரி மாவட்டத்தின் முக்கிய சந்தையாகத் திகழும் கோட்டார் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மட்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் இரவு நேரங்களில் மட்டும் மளிகை பொருட்களை கொள்முதல் செய்து வந்தனர்.
பரபரப்பு
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் காரணமாக நேற்று காலையில் கோட்டார் மார்க்கெட் பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. நேற்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்த கடைகளில் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் வாங்கி சென்றனர். இதனால் கோட்டார் சந்தை நேற்று பரபரப்புடன் காட்சி அளித்தது.
இதுதொடர்பாக கோட்டார் வர்த்தகர்கள் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர்  கிருஷ்ண பெருமாள், பொருளாளர் நாராயணன் ஆகியோர் கூறியதாவது:-
கோட்டார் மார்க்கெட்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரவில் மட்டும்தான் கடைகள் திறக்கப்பட்டு வந்தது. தமிழக அரசின் கூடுதல் தளர்வுகளால் கடைகள் பகல் நேரத்தில் திறக்க அனுமதிக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
பகல் நேரங்களில் கடைகள் திறக்கப்படுவதால் மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை மகிழ்சியுடன் வாங்கி செல்கிறார்கள். பாரம் ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களுக்கும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வியாபாரம் சற்று அதிகமாக நடக்கிறது. வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசங்கள் அணிந்தும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினிகள் பயன்படுத்தியும் வியாபாரம் செய்து வருகிறார்கள், என்று கூறினர்.
அரசு அலுவலகங்கள்
அத்தியாவசிய பணிகளை கவனிக்கும் அனைத்து அரசு அலுவலகங்களும், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அரசு அலுவலகங்களும் நேற்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கத் தொடங்கியது. பிற அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. தனியார் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான கடைகள் நேற்று காலை முதல் இரவு வரை திறக்கப்பட்டன. பல்வேறு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்தும், பல்வேறு பணிகளுக்காக சென்று வந்த தொழிலாளர்களின் போக்குவரத்தும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் குமரி மாவட்டம் ஊரடங்குக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பியது போல் காணப்பட்டது. 

Next Story