போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து: டயர் வெடித்ததால் தடுப்பு சுவரில் மோதிய மாநகர பஸ்


போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து: டயர் வெடித்ததால் தடுப்பு சுவரில் மோதிய மாநகர பஸ்
x
தினத்தந்தி 22 Jun 2021 12:36 AM GMT (Updated: 2021-06-22T06:06:13+05:30)

பொது போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே பூந்தமல்லியில் மாநகர பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

பூந்தமல்லி,

கொரோனா பரவல் காரணமாக வருகிற 28-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. திருநின்றவூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்தபோது திடீரென மாநகர பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற வேன் மற்றும் கார் மீது மோதியதுடன், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது.

5 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கேசவன் (வயது 52) மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராதாம்மாள் (72) என்ற பெண் பயணி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ் மோதியதில் வேன், கார் சேதம் அடைந்தது. அதில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

ஊரடங்கு தளர்வு காரணமாக பொது போக்குவரத்து தொடங்கிய முதல் நாளே மாநகர பஸ் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கின்போது பணிமனையில் நிறுத்தி இருந்த பஸ்களை முறையாக பராமரிக்காமல் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Next Story