நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமையுமா? சரத்பவார்- பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசனை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 Jun 2021 1:06 AM GMT (Updated: 22 Jun 2021 1:07 AM GMT)

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்பது குறித்தும், பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மும்பை, 

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் வகுத்து கொடுத்த நிலையில் பா.ஜனதா வெற்றி கனியை பறித்தது. அதன் பிறகு அவர் பெரும்பாலும் பா.ஜனதா கூட்டணி சாராத கட்சிகளுக்கு தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் தேர்தல் வியூக பணியாற்றினார். அந்த இரு கட்சிகளும் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளன.

இந்தநிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாைர கடந்த 11-ந் தேதி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் சந்தித்து பேசினார். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜனதாவுக்கு எதிராக செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டதால் தேசிய அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பிரசாந்த் கிஷோர் நேற்று மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள சரத்பவாரின் வீட்டில் சுமார் 1½ மணி நேரம் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பாக அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணிக்கு மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், "தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் சரத்பவார் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக சரத்பவார்- பிரசாந்த் கிஷோர் ஆலோசித்து இருக்கக்கூடும்" என்றார். 

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. முன்னாள் பா.ஜனதா மூத்த தலைவரும், தற்போது திரிணாமுல் காங்கிரசில் உள்ள யஷ்வந்த் சின்கா, ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி மூத்த தலைவர் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோருடன் சரத்பவார் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு மத்தியில் 2-வது முறையாக நடந்த சரத்பவார் மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story