கல்குவாரி குட்டையில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி


கல்குவாரி குட்டையில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 12:32 PM GMT (Updated: 2021-06-22T18:02:36+05:30)

கல்குவாரி குட்டையில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் காளிதாசன் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் சீத்தப்பட்டி சாலையில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன்பிடிக்க சென்றார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் காளிதாசன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். 
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் முருகேசன் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு காளிதாசனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Next Story