சரக்கு வாகனத்தில் மதுகடத்தி வந்த வாலிபர் கைது
ஊட்டி அருகே சரக்கு வாகனத்தில் அட்டை பெட்டிக்குள் மறைத்து வைத்து மதுகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
ஊட்டி அருகே சரக்கு வாகனத்தில் அட்டை பெட்டிக்குள் மறைத்து வைத்து மதுகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. இதையடுத்து சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்துவதை தடுக்க போலீசார் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு முக்கியமான இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தாவில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
அப்போது கூடலூரில் இருந்து ஊட்டி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினர். சோதனையில் சரக்கு வாகனத்தில் பட்டர் ப்ரூட், முருங்கைக்காய் போன்றவை இருந்தது. அதன் நடுவே அட்டை பெட்டி வைக்கப்பட்டது குறித்து போலீசார் டிரைவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் நடுவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு டிவியை பெட்டியில் எடுத்து செல்கிறேன் என்று தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பெட்டியை பிரித்து பார்த்தபோது மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் டிரைவரை கையும், களவுமாக பிடித்து புதுமந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நடத்திய விசாரணையில் கேரளா மாநிலத்தில் உள்ள மதுபானங்கள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 34 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக மதுபானங்களை கடத்தியதாக கூடலூரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் விஜய் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story