காட்பாடியில் லாரியை விரட்டிச்சென்ற போலீசார் மீது கற்கள் வீச்சு


காட்பாடியில்  லாரியை விரட்டிச்சென்ற போலீசார் மீது கற்கள் வீச்சு
x
தினத்தந்தி 22 Jun 2021 11:27 PM IST (Updated: 22 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் சோதனையின் போது நள்ளிரவில் நிற்காமல் சென்ற லாரி போலீஸ் வாகனம், சாலை தடுப்புகள் மீது மோதிவிட்டு ஆந்திராவுக்கு சென்று விட்டது. லாரியை விரட்டிச் சென்ற போலீசார் மீது அதில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

நிற்காமல் சென்ற மினி லாரி

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சத்துவாச்சாரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புதுவசூர் அருகே சாலையோரம் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட போலீசார் லாரியில் இருந்தவர்களிடம் விசாரிக்கச் சென்றனர்.

போலீஸ் வாகனத்தை கண்ட லாரி டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து லாரியை ஓட்டிச் சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்றனர். எனினும் அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகம், கிரீன்சர்க்கிள், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் இரவு பணியில் நின்றிருந்த போலீசார் வாகனத்தை மறித்தனர். எனினும் லாரி நிற்காமல் காட்பாடி நோக்கி சென்றது.
போலீஸ் மீது கற்கள் வீச்சு

அதனை விரட்டி சென்ற சத்துவாச்சாரி போலீசார் இதுகுறித்து விருதம்பட்டு மற்றும் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். லாரியை மடக்கி பிடிப்பதற்காக விருதம்பட்டு, சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் தடுப்புகளை அமைத்து போலீசார் தயார் நிலையில் இருந்தனர். விருதம்பட்டு மெயின் ரோட்டில் புகுந்த மினிலாரி போலீசார் சாலையில் வைத்திருந்த தடுப்புகளில் மோதி தூக்கி வீசிவிட்டு வேகமாக சென்றது. சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது சாலையோரம் நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது.

இதில் போலீஸ் வாகனம் பின்பக்கம் சேதமடைந்தது. மேலும் சாலையோரம் இருந்த தடுப்புகளையும் மோதி தூக்கி வீசிவிட்டு பொன்னை நோக்கி லாரி வேகமாக சென்றது. லாரியை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது லாரியின் பின்னால் இருந்தவர்கள், லாரியில் வைத்திருந்த கற்களை எடுத்து பின்னால் விரட்டி வந்த போலீசார் மீது வீசினர். இதனால் போலீசாருக்கு லாரியை பின்தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வேகமாக சென்ற லாரி ஆந்திர எல்லைக்குள் சென்று விட்டது.

போலீசாரை கண்டதும் லாரி நிற்காமல் சென்றதால் அதில் ஏதாவது கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் போலீசார் வைத்துள்ள தடுப்புகளையும் போலீஸ் வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால் அந்த லாரியின் பதிவு எண் மூலம் அதனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story