திருச்சியில் உள்ள பிரபல நிதி நிறுவனம் மீது ரூ.2 கோடியே 18 லட்சம் மோசடி புகார்


திருச்சியில் உள்ள பிரபல நிதி நிறுவனம் மீது ரூ.2 கோடியே 18 லட்சம் மோசடி புகார்
x
தினத்தந்தி 23 Jun 2021 12:28 AM IST (Updated: 23 Jun 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள பிரபல நிதி நிறுவனம் மீது ரூ.2 கோடியே 18 லட்சம் மோசடி செய்ததாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

திருச்சி,
திருச்சியில் உள்ள பிரபல நிதி நிறுவனம் மீது ரூ.2 கோடியே 18 லட்சம் மோசடி புகார் மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது.
பணம் முதலீடு

திருச்சி பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன் சமேஷ் (வயது28). இவர் நேற்று தனது வக்கீல்களுடன் வந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் நான் கடந்த 2019 நவம்பர் முதல் 2021 மார்ச் வரை ரூ.72 லட்சத்து 82 ஆயிரத்து 500 பணத்தை முதலீடு செய்தேன். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர்கள் 10 மாதத்தில் அந்த பணத்தை 3 மடங்காக திருப்பித் தருவதாக உறுதி அளித்தார்கள்.

ரூ.2.18 கோடி மோசடி

மேலும் அவர்கள் என்னை மூளைச்சலவை செய்து எனது உறவினர்கள், நண்பர்கள் இருந்தால் அவர்களிடமும் பணம் முதலீடு செய்ய சொல்லுங்கள் எனக்கூறினார்கள். நானும் அதை நம்பி எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியதால் அவர்கள் 10 பேர் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.19 லட்சம் வரை பணம் முதலீடு செய்தார்கள். 

அந்த வகையில் மொத்தம் நாங்கள் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.2 கோடியே 18 லட்சத்து 98 ஆயிரத்து 500 ஆகும். அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி எங்களுக்கு ரூ.4 கோடியே 68 லட்சத்து 35 ஆயிரத்து 500 முதிர்வு தொகை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தராமல் ஏமாற்றினார்கள்.

கொலை மிரட்டல்

இதுபற்றி நான் நேரில் கேட்க சென்ற போது அதன் உரிமையாளர்கள் மற்றும் சிலர் என்னை அடித்தார்கள். மேலும் இனி பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்கள்.

ஆதலால் நாங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப ஒப்படைப்பதற்கும், என்னை மிரட்டிய அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Next Story