விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜெயங்கொண்டத்தில் கொரோனா பரவும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கு தளர்வுகளின்படி மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜவுளி- நகைக்கடைகளில் விற்பனை
ஆனால் ஜெயங்கொண்டம் நகரப்பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி மற்றும் நகைக் கடைகளை திறந்து வைத்தும், சில கடைகளில் வாடிக்கையாளர்களை பின்வாசல் வழியாக கடைக்குள் அனுமதித்தும் கடையின் ஷட்டர்களை மூடிவிட்டு விற்பனை நடைபெறுகிறது.
அதேபோல் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சில கடைகளில் அங்கு நின்று டீக்குடிக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் அங்கு கூட்டம் காணப்படுகிறது.
கொரோனா பரவலுக்கு வாய்ப்பு
இதுபோன்ற விதிமுறை மீறல்கள் கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம், விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story