மனநலம் பாதித்தவரை குத்திக்கொன்ற 4 சிறுவர்கள்


மனநலம் பாதித்தவரை குத்திக்கொன்ற 4 சிறுவர்கள்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:23 AM IST (Updated: 23 Jun 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மனநலம் பாதித்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி அருகே மனநலம் பாதித்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனநலம் பாதித்தவர் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). இவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பசாமியை, அவருடைய தம்பி மாரீசுவரன், சகோதரி வசந்தி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் ஆகியும் கருப்பசாமி வீடு திரும்பாததால் அவரை தேடி மாரீசுவரனும், வசந்தியும் பாண்டியன்நகர் 1-வது தெரு பகுதிக்கு சென்றுள்ளனர். 
கொலை 
அப்போது அங்கு 4 சிறுவர்கள் கத்தியுடன் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த பகுதியில் தேடியபோது கருப்பசாமி கழுத்தில் கத்திகுத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர்கள் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 14, 16, 17, 17 வயதுடைய 4 சிறுவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 
காரணம் என்ன? 
இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சம்பவத்தின்போது, 4 சிறுவர்களும் கருப்பசாமியை கேலி கிண்டல் செய்ததாகவும், பதிலுக்கு அவர் திட்டியதால் ஏற்பட்ட மோதலில் 4 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்திக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story