திருத்தணியில் கோவில் வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
திருத்தணியில் கோவில் வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஸ்டாலின் நகர்மலை பகுதியில் உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் ஜாகிர் உசேன் (வயது 28) என்பதும். திருத்தணி நேரு நகர் வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சரண்யா (22) என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லத்தீப் (4) என்ற மகன் உள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகருக்குள் ரத்தக்கறை படிந்த உடைகளுடன் இருந்த குமரேசன் (21) உள்பட சிலரை சந்தேகத்தின் பேரில் அரக்கோணம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் தனது சகோதரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ஜாகிர் உசேன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சகோதரியை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற அவரை நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டியும். கம்பியால் குத்தியும் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார் குமரேசனை திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.ஜாகிர் உசேன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.
Related Tags :
Next Story