ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன


ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன
x
தினத்தந்தி 23 Jun 2021 4:47 AM GMT (Updated: 23 Jun 2021 4:47 AM GMT)

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன இதுவரை 1¼ கோடி தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தது.

ஆலந்தூர், 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரம் 360 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 24 லட்சத்து 61 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் மாதத்தில் 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் கடந்த 20-ந் தேதி வரை 26 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. மீதமுள்ள 22 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.

ஜூலை மாதம் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 45 பெட்டிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 90 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன.

விமான நிலையத்தில் இருந்து இறக்கப்பட்ட தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story