விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தேனி-போடி சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலை சந்திப்பில் நிரந்தர தீர்வாக பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி:
சாலை அமைக்கும் பணி
திண்டுக்கல்-குமுளி இடையே இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், போக்குவரத்துக்கு சாலை திறக்கப்படாத நிலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன.
எனவே இதர சாலை சந்திப்பு பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த இருவழிச்சாலையும், தேனி-போடி சாலையும் சந்திக்கும் இடத்தில் தொடர் விபத்துகள் ஏற்பட்டன.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய சாலையில் மண்ணை கொட்டி வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி-போடி சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
மஞ்சள் நிறக்கோடுகள்
அதன்பேரில், இந்த சாலை சந்திப்பின் இருபுறமும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், ஆபத்தான சாலை சந்திப்பு என்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சாலையில் மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தன.
பெயிண்டு மூலம் வரையப்படும் இந்த கோடுகளானது 1 சென்டிமீட்டர் தடிமன் கொண்டது. வரிசையாக 6 கோடுகள் வீதம், சீரான இடைவெளியில் 5 இடங்களில் இந்த அடுக்கு கோடுகள் வரையப்பட்டன. இதுவும் ஒருவிதமான வேகத்தடை போன்ற அமைப்பு தான்.
பணிகள் நடந்து கொண்டு இருந்த போதும் வாகனங்கள் வேகமாக சென்று வந்தன. இந்த இரு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை என்பதால், வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
எனவே, எதிர்காலத்தில் விபத்து ஏற்படாமல் தடுக்க நிரந்தர தீர்வாக இந்த சாலை சந்திப்பு பகுதியில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story