கூலித்தொழிலாளி அடித்துக்கொலை


கூலித்தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2021 8:54 PM IST (Updated: 23 Jun 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்:

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி காளியம்மன் கோவில்  தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் ரஞ்சித் (வயது 32). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி வெங்கடேஸ்வரி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

ரஞ்சித்தின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரபு. அவருடைய மனைவி சிவரஞ்சனி. ரஞ்சித்துக்கும், பிரபுவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, சிவரஞ்சனி, அவர்களது உறவினர்கள் பாண்டியன், கவின், நாகராஜ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து ரஞ்சித்தை சரமாரியாக கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தகராறை விலக்கி விட்டனர். பின்னர் ரஞ்சித் தனது வீட்டுக்கு சென்று தூங்கி விட்டார். நேற்று காலை அவருடைய மனைவி வெங்கடேஸ்வரி, ரஞ்சித்தை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேயே அவர் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ரஞ்சித்தின் தந்தை ராஜேந்திரன், கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பிரபு மற்றும் அவரது உறவினர்கள் அடித்ததால் தான் தனது மகன் இறந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

அதன்பேரில் புகார் கூறப்பட்ட 6 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபு, சிவரஞ்சனி, கவின், நாகராஜ், விக்னேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story