விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Jun 2021 4:46 PM GMT (Updated: 2021-06-23T22:16:29+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விலையில்லா பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கியும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்த படியே கல்வி பயில ஏதுவாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் உரிய அனைத்து பாடங்களுக்கான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதி உதவி பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்களை விரைந்து வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டிற்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் 998 தொடக்கப்பள்ளிகள், 252 நடுநிலைப்பள்ளிகள், 141 உயர்நிலைப்பள்ளிகள், 143 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,534 பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் 1,63,881 மாணவ- மாணவிகளுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் 49,650 மாணவ- மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 2,13,531 மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

விடுபடாத வகையில்

எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் விவரம் குறித்து முன்னதாகவே தகவல் தெரிவித்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகுப்பு வாரியாக நாள் மற்றும் நேரம் ஒதுக்கீடு செய்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு வாரியாக எந்தெந்த வகுப்புகளுக்கு எந்தெந்த வகுப்பறையில் எந்த தேதியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது என்ற விவரம் பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். எந்தவொரு மாணவ-மாணவியும் விடுபடாத வகையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பழனி, சசிகலா, யமுனாபாய், முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன், உதவியாளர் மேகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story