கட்டையால் அடித்து தொழிலாளி கொலை
குத்தாலம் அருகே கட்டையால் அடித்து செங்கல் சூளை தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே கட்டையால் அடித்து செங்கல் சூளை தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல் சூளை தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சின்ன கொக்கூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 60). இவர் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கணேசன் வேலைக்கு சென்றார்.
அப்போது அங்கு அக்கரை கொக்கூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் ரஞ்சித்(வயது 30) என்பவர் குடி போதையில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கணேசன், ரஞ்சித்தை தட்டிக் கேட்டுள்ளார்.
கட்டையால் தாக்குதல்
இதனால் மதுபோதையில் இருந்த ரஞ்சித், கணேசனிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், அருகில் இருந்த கட்டையால் கணேசனை சரமாரியாக தாக்கினார். இதனை கண்டு அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(50) என்பவர் இருவரையும் விலக்கி சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது ரஞ்சித், ரவிக்குமாரையும் கட்டையால் தாக்கி விட்டு சென்று விட்டார். இதில் காயம் அடைந்த கணேசன், ரவிக்குமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரிதாப சாவு
தலையில் பலத்த காயம் அடைந்த கணேசன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குடிபோதையில் முதியவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story