மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது
பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.
கொள்ளிடம்:
பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.
பழையாறு துறைமுகத்தில்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த வருடம் மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு மீனவர்கள் விசைப் படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.
சாதாரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மீனவர் வலையில் கோட்டான் திருக்கை மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஆனால் இந்த வருடம் கோட்டான் திருக்கை கிடைப்பது அரிதாக இருந்து வருகிறது. கடந்த பல நாட்களாக கோட்டான் திருக்கை மீனவர்கள் வலையில் கிடைக்கவில்லை.
100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது
இந்த நிலையில் நேற்று ஒரு மீனவர் வலையில் ஒரே ஒரு கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. 100 கிலோ எடையுள்ள இந்த கோட்டான் திருக்கை மீனை அப்படியே விற்பனை செய்ய முடியாது. காரணம் கோட்டான் திருக்கை மீனை மீனாக சமைத்து பெரும்பாலோர் சாப்பிட விரும்புவதில்லை.
இந்த வகை மீன் கருவாடாக உலர்த்தப்பட்டு பின்னர் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை கருவாடுரூ 60 முதல் ரூ.70 வரை விலை போகிறது. இதனால் மீனவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
போதிய லாபம் கிடைக்கவில்லை
இதுகுறித்து பழையாறு மீன் வியாபாரி பொன்னையா கூறுகையில், வருடம் தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஒவ்வொரு மீனும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகும். சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த மீன்கள் கருவாடாக உலர்த்தப்பட்டு நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வருடம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலைகளில் அதிகம் சிக்கியது. இதனால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. இந்த வருடம் கோட்டான் திருக்கை மீன் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் போதிய லாபம் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைத்தால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.
Related Tags :
Next Story