வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை-நகைக்காக நடந்ததா? போலீசார் விசாரணை
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை மர்ம நபர்கள் நகைக்காக கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் நடராஜபுரம் 4-வது வீதியில் வசித்து வந்தவர் ஜானகி (வயது 50). இவரது கணவர் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு ராமசந்திரன் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜானகி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ராமசந்திரன் சென்னையில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.
தையல் தொழில் செய்து ஜானகி பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று எற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்ற ஜானகி, குணமாகி வீடு திரும்பினார். எனவே கடந்த 25 நாட்களுக்கு முன்பு வேலைக்கார பெண் ஒருவரை தனக்கு உதவியாக வைத்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ராமசந்திரன், தனது தாயார் ஜானகியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ஜானகி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனது உறவினரான பாண்டியன் (24) என்பவரை வீட்டுக்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். அப்போது ஜானகி படுக்கை அறையில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஜானகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாண்டியன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜானகி காதில் அணிந்து இருந்த ¾ பவுன் தோடு மற்றும் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் தலையணையால் ஜானகி முகத்தை அமுக்கி கொலை செய்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே உறுதியாக தெரிவிக்க முடியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜானகியின் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் திடீரென மாயமாகி உள்ளார். எனவே அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story