குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அடிக்கடி தோண்டப்படும் சாலை
ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அடிக்கடி சாலைகள் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அடிக்கடி சாலைகள் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.
கூட்டுக்குடிநீர் திட்டம்
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கிலிருந்து, ஐ.என்.டி.யு.சி. நகர் வரை தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கடந்த ஆண்டு குழி தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன.
பணிகள் முடிந்தவுடன் சாலைகள் போடப்பட்டது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட போது தெருக்களுக்கு வரும் குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்தது. அதனை சரியாக பழுது பார்க்காமல் சாலை அமைத்ததால் குடிநீர் வரும் நாளன்று தெருக்களில் குடிநீர் வீணாகி ஆறு போல் ஓடியது.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து தற்போது மீண்டும் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்களை பழுது பார்ப்பதற்காக தோண்டி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக ராஜபாளையம் - சங்கரன்கோவில் செல்லும் சாலையில் குழிகள் ேதாண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறுகலான சாலை
அடிக்கடி இவ்வாறு தோண்டுவதால் சாலையின் தரம் குறைகிறது. ஏற்கனவே இந்த சாலை மிகவும் குறுகலான சாலை ஆகும்.
அதுவும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டும் போது அந்த மண்ணை பணி முடிந்தவுடன் அள்ளாமல் அப்படியே போட்டுள்ளனர்.
இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாக போய்விட்டது. ஆதலால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி பொதுமக்கள் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது.
சங்கரன்கோவில் முக்கிலிருந்து புதிய பஸ்நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த சாலைக்கு வலது புறம் பெரிய ஓடை இருப்பதால் இந்த சாலையில் விபத்துக்களும் உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
நடவடிக்கை
எனவே இந்த முறை குடிநீர் குழாய்களை சரியான முறையில் பழுது நீக்குவதுடன், இந்த சாலையை அகலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் இந்த பகுதியில் சீரான போக்குவரத்து நடைபெறுவதுடன், தேவையற்ற விபத்துகளையும் தடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story