தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி


தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 8:21 PM GMT (Updated: 2021-06-24T01:51:53+05:30)

தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி பூபதி. இந்த தம்பதிக்கு பிரகாஷ் (வயது 7), செந்தில் (6) ஆகிய 2 மகன்கள். தம்பதி நேற்று காலை காட்டுபிள்ளையார் கோவில் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள குட்டையில் பிரகாஷ் மற்றும் செந்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் சிறுவன் செந்தில் குட்டை தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்தான்.இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் உடலை எடுத்துச் சென்றால் மீண்டும் ஒப்படைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறுவனின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரை சிறுவனின் உடலை ஒப்படைக்க கிராம மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை இதுகுறித்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுவனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.Next Story