செங்கோட்டையில் இளம்பெண் விடிய விடிய போராட்டம்
தந்தையை போலீசார் தாக்கியதை தொடர்ந்து செங்கோட்டையில் இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்தினார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த 18-ந் தேதி ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்கிக் கொண்டு தனது சித்தப்பா சின்னச்சாமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த புளியரை போலீசார், அரிசியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார்கள்.
இதையடுத்து பிரான்சிஸ் அந்தோணி புளியரை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் பிரான்சிஸ் அந்தோணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா (22) அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர் கீழே இறங்கி வந்தார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக பிரான்சிஸ் அந்தோணி தனது குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, திடீரென்று அபிதா ஆஸ்பத்திரியின் மேல் தளத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார், அபிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் வழக்குப்பதிவு செய்த ஆவணங்களை காட்டினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று கூறி தொடர்ந்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு உறவினர்கள் உணவு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். அபிதாவின் தொடர் போராட்டம் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல் (294-பி), தாக்குதல் (323), அவமானப்படுத்துதல் (355) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் புளியரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் இந்த ஆவணங்கள் அபிதாவிடம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் தீயணைப்பு துறையினர் தண்ணீர் தொட்டி மீது ஏறி கயிறு கட்டி அபிதாவை கீேழ இறக்கினார்கள். அப்போது, கீழே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அபிதாவின் அக்காள் ஜூலியுடன் சேர்ந்து அவர் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கு இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story