சேலம் ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரண நிதி வாங்க திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
சேலம் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வாங்க நேற்று பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கையொட்டி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருகிறது. அப்படி நிவாரணம் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று சேலம் ஜான்சன்பேட்டையில் ரேஷன்கடையில் கொரோனா நிவாரண நிதி வாங்க ஒரே நேரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வரிசையில் நின்றாலும் சமூக இடைவெளியை மறந்து நெருக்கமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 12-வது வார்டு மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் அடுத்தடுத்து 2 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளிலும் கொரோனா நிவாரண நிதி வாங்க ஏராளமானவர்கள் காலை 7 மணி முதலே திரண்டனர். அவர்களும் சமூக இடைவெளியை மறந்து நின்றனர். இதனால் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், சமூக இடைவெளியுடன் நிற்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நிவாரண நிதி வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றதால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த ரேஷன் கடை முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் வரைந்தனர். அதன்பிறகு பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று நிவாரணத்தை வாங்கினர்.
சேலம் மாவட்டத்தில் தற்போது நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற நிவாரணம் பெறும் இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் மீண்டும் தொற்று பரவும் வேகம் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுன்னர்.
Related Tags :
Next Story