திருச்சியில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியும் சுழல் விளக்கு பொருத்தி காரில் உலா வந்த ஓய்வு பெற்ற பெல் அதிகாரி, டிரைவர் கைது
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி, சுழல் விளக்கு பொருத்தியும் காரில் உலா வந்த ஓய்வுபெற்ற பெல் அதிகாரி, டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி, சுழல் விளக்கு பொருத்தியும் காரில் உலா வந்த ஓய்வுபெற்ற பெல் அதிகாரி, டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
சுழல் விளக்கு
திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டிக்கர் ஒட்டியும், சுழல் விளக்கு (சைரன்) பொருத்திய படியும் கார் ஒன்று வந்தது. அதை கண்டு சந்தேகம் அடைந்த கண்டோன்மெண்ட் போலீசார் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
காரில் இருந்தவர் திருச்சி காட்டூர் எல்லைக்குடி விக்னேஷ் நகரை சேர்ந்த கிரண்சிங் (வயது 40) என்பதும், திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற செக்யூரிட்டி அதிகாரி என்பதும் தெரிய வந்தது. தற்போது சிட்டிசன் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி புரொக்டைசன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது.
2 பேர் கைது
தனக்கு சொந்தமான காரில் நீண்ட காலமாக சுழல் விளக்கு பொருத்தி, தன்னை ஒரு அரசு உயர் அதிகாரியாக பொதுமக்கள் தோற்றத்திற்கு காட்சியளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உலா வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், பத்திரிகையாளர் என்றால் போலீஸ் கெடுபிடி செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்தில் பிரஸ் என்று ஸ்டிக்கரும் ஒட்டியுள்ளார்.
காரை அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். காரில் சுழல் விளக்கு பொருத்தியதற்கும், பிரஸ் என்று ஸ்டிக்கர் போன்ற அடையாளங்களை காரில் ஒட்டியதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதபடியாலும், அரசு அதிகாரி போல போலியாக காட்சிப்படுத்திக்கொண்டு பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட காரணத்தால் கிரண்சிங் மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் இ.பி.கோ.சட்டப்பிரிவு 420, 511, 190 (ii) மற்றும் மோட்டார் வாகன சட்ட படி வழக்குப்பதிவு செய்தும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இனிவருங்காலங்களில் இதுபோன்று அரசு ஆணையினை மீறி சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரித்து உள்ளார்.
Related Tags :
Next Story