காலி இடத்தில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் மீட்டு பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்
விருகம்பாக்கத்தில் காலி இடத்தில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் மீட்ட போலீசார், அதை பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், தாரசாந்த்கர் பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில் உள்ள மரத்தின் அடியில் வெடிகுண்டு போல் சந்தேகப்படும் பொருள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அவை நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரிந்தது. மரத்தின் அடியில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வடபழனி, குமரன் காலனியில் உள்ள காலி இடத்தில் 2 வெடிகுண்டுகளையும் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் புதைத்து வைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்ய கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டது. அதன்படி நேற்று மாலை குமரன் காலனியில் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும், வெடிகுண்டு நிபுணர்கள் மிக பாதுகாப்பாக வெடிக்க செய்தனர்.
விருகம்பாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வந்தது எப்படி?, யார் வைத்து விட்டு சென்றனர்?. சதி செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் அவை இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டதா? அல்லது சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி வெடிகுண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story