லாரி மோதியதில் தந்தை-மகன் பலி
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.
சேலம்
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.
விபத்து
கள்ளக்குறிச்சி அருகே ஆரணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 27). இவருடைய மகன் விக்னேஷ் (10). திருப்பூர் மாவட்டம் காங்ேகயம் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் செல்வம், அவரது அண்ணி இளவரசி (35) ஆகியோர் தங்கியிருந்து வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருமந்துறையில் செல்வத்தின் தாயார் இறந்துவிட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வம், அவரது அண்ணி இளவரசி, மற்றும் மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் காங்கேயத்தில் இருந்து புறப்பட்டனர்.
அப்போது சேலத்தை கடந்து மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது, பின்னால் ஒரு லாரி வந்தது. அதே நேரத்தில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி கியாஸ் சிலிண்டர் லோடு ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்ததால் மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த லாரியை அதன் டிரைவர் சாலையோரம் திருப்பி உள்ளார்.
தந்தை, மகன் பலி
அப்போது லாரியின் முன்னால் சென்ற செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் செல்வம், அவருடைய மகன் விக்னேஷ் ஆகியோர் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் உடன் சென்ற இளவரசி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் தந்தை, மகனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த இளவரசியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உறவினர்கள் சோகம்
விபத்து நடந்த மாசிநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மலை பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையான இந்த பகுதியில் சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் பகுதியில் சில கிலோ மீட்டர் தூரம் இருவழிச்சாலையாக உள்ளது. இதனால் ஒரே சாலையில் வாகனங்கள் சென்று வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
4 வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலையில் தேவையான இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. சேலம் அருகே விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story