எம்-சாண்டுடன், பாறைப்பொடி கலந்து விற்பனை


எம்-சாண்டுடன், பாறைப்பொடி கலந்து விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2021 7:22 PM IST (Updated: 24 Jun 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் எம்-சாண்டுடன் பாறைப்பொடி கலந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கம்பம்:

கட்டுமான பொருட்களின் அரசி என்றால் அது மணல் தான். ஆனால் தற்போது மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதையடுத்து ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்று மணலுக்கு மாற்றாக, எம்-சாண்ட் என்று அழைக்கப்படுகிற செயற்கை மணல் கட்டுமான பணிக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எந்திரங்கள் மூலம் கருங்கற்களை சிறு, சிறு துகள்களாக உடைத்து சலித்து, அதனை தண்ணீர் ஊற்றி முற்றிலும் கழுவி மணல் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவே எம்-சாண்ட் ஆகும். குவாரியில் ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல் ஜல்லிக்கற்களை உடைக்கும்போது உருவாகும் கழிவுப்பொருளான பாறை பொடி (கிரஷர் டஸ்ட்) ஒரு யூனிட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இந்தநிலையில் கம்பம் பகுதியில் எம்-சாண்டுடன் பாறைப்பொடியை கலந்து சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. 

பாறைப்பொடியை கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடாது என கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பாறைப்பொடியை எம்- சாண்டுடன் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story