மரக்காணம் அருகே கடற்கரையில் செத்து ஒதுங்கிய திமிங்கலம்


மரக்காணம் அருகே  கடற்கரையில் செத்து ஒதுங்கிய திமிங்கலம்
x
தினத்தந்தி 24 Jun 2021 9:59 PM IST (Updated: 24 Jun 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே கடற்கரையில் திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது.


விழுப்புரம், 

கரைஒதுங்கிய திமிங்கலம்

மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று அதிகாலை வழக்கம்போல் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள கடற்கரையோரத்தில் பெரிய அளவிலான அரியவகை மீன் ஒன்று இறந்து எலும்புக்கூடான நிலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அவர்கள், அதன் அருகில் சென்றபோது, இறந்து கிடந்த மீன் ஆழ்கடலில் வசிக்கக்கூடிய நீல திமிங்கலம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், மரக்காணம் போலீசார் மற்றும் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மீன்வளத்துறையினரும், போலீசாரும் அங்கு நேரில் சென்று, இறந்து கிடந்த நீல திமிங்கலத்தை பார்வையிட்டனர்.

எப்படி இறந்தது?

மேலும் இதுவரை இல்லாமல் மரக்காணம் பகுதியில் திமிங்கலம் கரை ஒதுங்கிய செய்தி அப்பகுதி பொதுமக்களிடையே காட்டுத்தீ போல பரவியது. உடனே அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து இறந்து கிடந்த அந்த திமிங்கலத்தை பார்த்துச்சென்றனர்.
கரை ஒதுங்கிய திமிங்கலம் சுமார் 50 அடி நீளமும், 20 டன் எடையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மேற்புறத்தில் அடிபட்ட நிலையில் அழுகியுள்ளதால் பல நாட்களுக்கு முன்பு கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும், காற்றின் திசை மாற்றத்தினால் தற்போது இப்பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மீன்வளத்துறையினரின் ஆய்வுக்கு பின்னரே இந்த திமிங்கலம் எப்படி இறந்தது என்ற முழுமையான விவரம் தெரியவரும்.

Next Story