கொரோனா தடுப்பூசி செலுத்த முதியோர்களுக்கு முன்னுரிமை


கொரோனா தடுப்பூசி செலுத்த முதியோர்களுக்கு முன்னுரிமை
x
தினத்தந்தி 24 Jun 2021 10:07 PM IST (Updated: 24 Jun 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்த முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி, ஜூன்.25-
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

அப்போது முதியோர்கள், மூதாட்டிகள் சிலர் வரிசையில் காத்திருந்தனர். இதைப் பார்த்த கலெக்டர், அந்த முதியவர்களின் அருகில் சென்று அவர்களை வரிசையில் நிற்காமல் முன்னால் வருமாறு அழைத்து வந்தார். 
பின்னர், அவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 

இதனையடுத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் சுகாதாரத்துறையினரிடம் கூறுகையில், "தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கி உள்ளனர். 

சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடித்து வரிசையில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்த வந்தால் அவர்களை மற்றவர்களோடு வரிசையில் காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார். 

முன்னதாக பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளித்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார். இதில், 6 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

 இதேபோல் வைகை அணை அருகே ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

---
Image1 File Name : 4698611.jpg

Next Story