அனைத்து கோவில்களிலும் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை
அனைத்து கோவில்களிலும் பக்தர்களை அனுமதிக்க இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முழுஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் நின்று சாமி மற்றும் கோபுரத்தையும் தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்குள் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு மற்றும் கோவிலின் நான்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலையே நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எனவே கட்டுப்பாடுகளுடன் வருகிற ஜூலை மாதம் 1-ந்் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோவிலை நம்பி வாழும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:- முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூக இடைவெளியும் இல்லாமல் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்க குடிமகன்கள் கூட்டமாக கூடி வருகின்றனர். மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்ட அரசு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களை வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story