கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வங்கி அதிகாரி பலி


கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வங்கி அதிகாரி பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 10:28 PM IST (Updated: 24 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி அதிகாரி பலியானார். ஆக்சிஜனை நிறுத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி அதிகாரி பலியானார். ஆக்சிஜனை நிறுத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

வங்கி அதிகாரிக்கு கொரோனா

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40). இவர், நாகையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருணமாகி சுபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராஜேசுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 12-ந் தேதி சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக  அவரது மனைவி சுபா உடன் இருந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று  முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுபா கதறி அழுதார். 

ஆக்சிஜனை நிறுத்தியதால் இறந்ததாக மனைவி புகார்

அப்போது அவர் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.  
அதைத்தொடர்ந்து ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜனை நிறுத்தியதால் தான் எனது கணவர் ராஜேஷ் இறந்தார் என்று அவர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.. தகவல் அறிந்து ராஜேசின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்கள், ஆக்சிஜனை நிறுத்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை  நடத்தினார். தொடர்ந்து ஆக்சிஜன் உள்ள அறை, அறுவை சிகிச்சை அரங்கம், குழந்தைகள் சிகிச்சை மையம், தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். 
பின்னர் கலெக்டர் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கும் முறை, வழங்கப்படும் உணவு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் கலெக்டர் 3 மணி நேரம்  டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். 

Next Story