கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
கோத்தகிரியில் விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மலை காய்கறிகள்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இதன்படி விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
உருளைக்கிழங்கு சாகுபடி
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கடந்த சில வாரங்களாக நீலகிரி உருளைக்கிழங்குக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.
எனவே கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, உயிலட்டி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை விற்பனை செய்வதற்காக தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
மேலும் பெரும்பாலான விவசாயிகள் மீண்டும் தங்களது தோட்டங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலையான விலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்குக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.42 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. கொள்முதல் விலை நிலையாக இருப்பதால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருகிறது.
இதன் காரணமாக விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன்படி விவசாயிகள் நிலத்தில் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை பயிரிட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story