தொப்பூர் அருகே, மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துக்காக வயதான தம்பதியை கொன்ற மகன்-2 பேரன்கள் கைது- கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலம்


தொப்பூர் அருகே, மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துக்காக வயதான தம்பதியை  கொன்ற மகன்-2 பேரன்கள் கைது- கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:26 PM IST (Updated: 24 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே வீட்டில் வயதான தம்பதி மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. சொத்துக்காக அவர்களை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மகன்-2 பேரன்களை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே வீட்டில் வயதான தம்பதி மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. சொத்துக்காக அவர்களை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மகன்-2 பேரன்களை போலீசார் கைது செய்தனர்.
வயதான தம்பதி
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). இவருடைய மனைவி கோசலை (75). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, அந்த வயதான தம்பதியின் உடல்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது. எனவே அந்த தம்பதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அந்த தம்பதியின் மகன் ஆனந்தன் (55) மற்றும் ஆனந்தனின் மகன்கள் சக்திவேல் (33), மோகன்குமார் (25) ஆகியோரிடம் போலீசார் விசாரணைநடத்தினர்.
தந்தை-2 மகன்கள் கைது
அதேநேரத்தில் இறந்த தம்பதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதி மர்ம சாவு குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே பிரேத பரிசோதனையில், அந்த தம்பதிகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவருடைய மகன்கள் சக்திவேல், மோகன்குமார் ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சொத்துக்காக வயதான தம்பதியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் தம்பதியின் உடல் அருகே விஷ பாட்டிலை வைத்து விட்டு அவர்கள் வயது முதிர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் கருதும் வகையில் அந்த தம்பதியின் மகன் மற்றும் பேரன்கள் நாடகமாடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தன், அவருடைய மகன்கள் சக்திவேல், மோகன்குமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கைதான ஆனந்தனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனது தந்தை துரைசாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. குறிப்பாக சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்தின் பாகம் சகோதரிகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக முழு சொத்தையும் நானும், எனது மகன்கள் இருவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தாய்-தந்தையை கொலை செய்திட திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் சேர்ந்து எனது தந்தை, தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டோம்.
பின்னர் அது கொலை என தெரியக்கூடாது என்பதற்காக அவர்களின் உடல் அருகே விஷ பாட்டிலை வைத்து விட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசாரை நம்ப வைக்க நாடகமாடினோம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்ததால் போலீசில் நாங்கள் சிக்கி கொண்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தொப்பூர் அருகே சொத்துக்காக வயதான தம்பதியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மகன்-2 பேரன்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே நேற்று இரவு ஆனந்தனின் மனைவியும், இறந்த தம்பதியின் மருமகளுமான செல்வம்(50) என்பவரை இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story