குமரியில் ஒரே நாளில் 15,770 பேருக்கு கொரோனா தடுப்பூசி


குமரியில் ஒரே நாளில் 15,770 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 Jun 2021 12:35 AM IST (Updated: 25 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15,770 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15,770 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மூன்றாவது அலையை எதிர்கொள்ள...
குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், 3-வது அலை உருவானாலும் அதை எதிர் கொள்ளும் வகையிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 323 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று குமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாகர்கோவில் நகரில் மட்டும் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மற்றும் பறக்கை அரசு பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் கோவேக்சின் தடுப்பூசியும், நாகர்கோவில் கோட்டார் கவிமணி பள்ளி, இந்துக்கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் சி.எம்.சி. பள்ளி ஆகிய 4 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டது
நீண்ட வரிசை
ஏற்கனவே, சிறப்பு முகாம்கள் அனைத்திலும் காலை 9.30 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும், 10.30 மணிக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை 10.45- க்குதான் தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்ந்தன. இதனால் நாகர்கோவிலில் சில மையங்களில் காலை 11 மணிக்கும், சில மையங்களில் 11.15 மணிக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
காலை 9.30 மணிக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில மையங்களில் காலை 6 மணிக்கே மக்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினர். சில மையங்களில் ஒன்றிரண்டு மணி நேரங்களுக்கு முன்னதாகவே மக்கள் வந்தார்கள்.
இதனால் நாகர்கோவிலில் நேற்று நடந்த 6 சிறப்பு முகாம்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாநகராட்சி ஊழியர்கள் மக்களுக்கு டோக்கன்களை வழங்கினர். டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த பள்ளி, கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறவும், டோக்கன் பெறாதவர்கள் யாரும் உள்ளே நுழையவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் எந்த மையத்திலும் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு எதுவும் ஏற்படவில்லை. சில மையங்களில் கூடுதலாக இருந்த தடுப்பூசி மருந்துகள் தாமதமாக வந்தவர்களுக்கும் போடப்பட்டது. இதனால் ஒவ்வொரு மையத்திலும் மீதமுள்ள தடுப்பூசி மருந்து நமக்கு கிடைக்காதா? என்ற எண்ணத்தில் பலர் மதியம் வரை வெளியே காத்திருந்தனர். மொத்தத்தில் நாகர்கோவில் நகரில் கோவேக்சின் தடுப்பூசி மருந்து 600 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 1,500 பேருக்கும் செலுத்தப்பட்டது.
15,770 பேருக்கு தடுப்பூசி
குளச்சல் கோடிமுனை கடற்கரை பகுதியில் உள்ள மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணல் பரப்பில் காத்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. அனைத்து சிறப்பு முகாம்களிலும் மொத்தம் 15 ஆயிரத்து 770 பேருக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.

Next Story