வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது


வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2021 12:37 AM IST (Updated: 25 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வங்காளதேசத்தவர்
திருப்பூர் ராக்கியாபாளையம் ரோடு கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர் தண்ணீர்பந்தல்காலனியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் குடியிருக்கும் வீட்டின் முன்பு மற்றொரு கட்டிடத்தில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வங்காளதேசத்தை சேர்ந்த சிமுல்காஜி (29) என்பவர் மணிகண்டனுக்கு சொந்தமான கட்டிடத்தில் காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு விடுமாறு கேட்டார்.
இதையடுத்து மணிகண்டன், சிமுல் காஜியிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்களை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு ராக்கியாபாளையத்தில் தான் வேலை செய்யும் பனியன் நிறுவனம் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளது என்றும், திறந்த உடன் அவற்றை வாங்கித் தருகிறேன் என்றும் சிமுல் காஜி கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிமுல் காஜி கடந்த ஏப்ரல் மாதமே மணிகண்டன் வீட்டிற்கு குடிவந்தார். அவருடன் அதே நாட்டை சேர்ந்த சைபுல் இஸ்லாம் (40) மற்றும் மன்னன் முல்லா (31) ஆகியோரும் அடிக்கடி வந்து தங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 
போலி ஆதார் அட்டை
மணிகண்டன் சிமுல்காஜியின் ஆவணங்களை கொடுக்கும்படி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால் அதை கொடுக்காமல் சிமுல் காஜி தொடர்ந்து காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மணிகண்டன் சிமுல் காஜி வீட்டிற்கு சென்று பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும். இல்லையென்றால் வீட்டை காலி செய்யவேண்டும் என்று கூறினார். 
இதையடுத்து சிமுல் காஜி இந்தியாவில் அவர் பெயரில் உள்ள ஆதார் அட்டையை காட்டினார். அவரிடம் மணிகண்டன் வங்காள நாட்டை சேர்ந்த நீங்கள் எப்படி இந்தியாவில் ஆதார் அட்டையை வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வங்காள தேச நாட்டில் இருந்து வரும் எல்லோருமே இதுபோன்ற போலியான ஆதார் அட்டையைத்தான்
வைத்திருப்போம் என்று கூறினார். 
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனே வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அங்கிருந்த சைபுல் இஸ்லாம், மாதந்தோறும் உங்களுக்கு வாடகையை சரியாக கொடுக்கிறோம். பின்னர் ஏன் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறி மணிகண்டனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் அவருடன் சேர்ந்து சிமுல் காஜி, மன்னன் முல்லா ஆகியோரும் மணிகண்டனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. 
மேலும் நீ இங்கிருந்து போகவில்லை என்றால், உன்னை அடித்து கொன்று விடுவோம் என்று கூறி 3 பேரும் சேர்ந்து மணிகண்டனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிமுல் காஜி, சைபுல் இஸ்லாம், மன்னன் முல்லா ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த 3 பேரும்  உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் சிமுல்காஜி ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். மற்ற 2 பேரும் எஸ்.ஏ.பி. சந்திப்பு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதற்கு முன்பு 3 பேரும் ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருந்ததும், அவர்களிடம் வங்காள நாட்டின் குடியுரிமைக்கான எந்த ஆவணங்கள் இல்லை என்பதும், தற்போது இங்குள்ள போலி ஆதார் அட்டைகளை வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலி ஆதார் அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 
விசாரணை
இவர்கள் 3 பேரும் வங்காள தேச நாட்டில் இருந்து இந்தியாவிற்கு எப்படி வந்தனர்? என்றும், இதற்கு முன்பு எங்கு தங்கியிருந்தனர்? என்றும், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது குறித்தும், போலி ஆதார் அட்டையை பெற்றது எப்படி? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் அவர்களிடம் சென்னையை சேர்ந்த உளவுத்துறை போலீசார் மற்றும் திருப்பூர் போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story