2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை


2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு  தாய் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 12:38 AM IST (Updated: 25 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளத்தில் கணவன் வேலைக்கு செல்லாததால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் கணவன் வேலைக்கு செல்லாததால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள வில்லுபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 33), கட்டிட தொழிலாளி. இவருக்கும், செங்கோட்டையை சேர்ந்த திருமலைச்செல்வி (26) என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 
இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி குடும்பத்துடன் தென்தாமரைகுளம் வடக்கு பகுதிக்கு வந்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். பாண்டி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
தகராறு
இந்த நிலையில் பாண்டி வேலைக்கு சரிவர செல்லாததால் குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் திருமலைச்செல்வி தவித்தார். இதை கணவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. 
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பாண்டி வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாண்டி வெளியே சென்று விட்டார்.
விஷம் கொடுத்தார் 
இதனால் மனவேதனை அடைந்த திருமலைச் செல்வி அரளி விதையை அரைத்து தன்னுடைய 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டார். இதனால் திருமலைச்செல்வி மற்றும் 2 மகள்களும் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். 
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பாண்டி தன்னுடைய மனைவி, குழந்தைகளின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரண்டு குழந்தைகளுக்கும் திருமலைச்செல்விக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைத்தனர். மனைவி மயங்கிய நிலையில் இருந்தார்.
சாவு
உடனடியாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருமலை செல்வியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திருமலைச்செல்வி இறந்து விட்டார் என்று கூறினார்கள்.
இதுபற்றி பாண்டி தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் விரைந்து வந்து திருமலைச் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சொர்ணராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story