சாவிலும் இணைபிரியாத தம்பதி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன்-மனைவி அடுத்தடுத்து சாவு கும்பகோணம் அருகே பரிதாபம்


சாவிலும் இணைபிரியாத தம்பதி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன்-மனைவி அடுத்தடுத்து சாவு கும்பகோணம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 25 Jun 2021 1:09 AM IST (Updated: 25 Jun 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும் அடுத்தடுத்து இறந்தனர். சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் மறைவு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கும்பகோணம்:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும் அடுத்தடுத்து இறந்தனர். சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் மறைவு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கும்பகோணம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 72). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி இந்திராணி (65). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்து மற்றும் இந்திராணி ஆகிய இருவரும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

சாவிலும் இணைபிரியாத தம்பதி

இதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 
இந்த நிலையில் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவருடைய மனைவி இந்திராணி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவருடைய உடல்களும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தஞ்சையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
கொரோனா தொற்று ஏற்பட்டு சாவிலும் இணைபிரியாமல் தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story