நெல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக்கொலை; கணவர் கைது
நெல்லை டவுனில் பட்டப்பகலில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக்ெகாலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற கவிதா (வயது 27). இவருடைய சொந்த ஊர் நெல்லை டவுன் வழுக்கோடை அருகே உள்ள கண்டியப்பேரி ஆகும். அதே ஊரைச் சேர்ந்த சுடலை மகன் ராமச்சந்திரனுக்கும் (20) இசக்கியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சேர்மத்துரை மற்றும் உறவினர்கள், 2 பேரிடமும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார்கள். ஆனால், அவர்கள் அதை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி திடீரென்று வீட்டை விட்டு வெளியேறியது. அவர்களை சேர்மத்துரை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று டவுன் வழுக்கோடை ஸ்ரீராம் நகர் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி நிற்பதாக சேர்மத்துரைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சேர்மத்துரை, அவருடைய சகோதரர்கள் சுப்பிரமணியன், மாரிசெல்வம் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
இவர்களைக் கண்டதும் இசக்கியம்மாள், ராமச்சந்திரன் ஆகியோர் குடியிருப்புகளை கடந்து வயல் வெளிக்குள் தப்பி ஓட்டம் பிடித்தனர். சேர்மத்துரை உள்பட 3 பேரும் விரட்டிச்சென்று இசக்கியம்மாள், ராமச்சந்திரன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் சேர்மத்துரை உள்பட 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த இசக்கியம்மாள், ராமச்சந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இசக்கியம்மாள் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சேர்மத்துரையை பிடித்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்பிரமணியன், மாரிசெல்வம் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை டவுனில் பட்டப்பகலில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக்ெகாலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story