9 அமைச்சர்களிடம் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
நாங்குநேரி தொகுதியில் திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி 9 அமைச்சர்களிடம் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நேரில் மனு கொடுத்தார்.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைக்கப்பட வேண்டும் என்பது நாங்குநேரி தொகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த நதிநீர் இணைப்பு திட்டம், இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே நதிநீர் இணைப்பு திட்டப்பணிகளை, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுத்த மனுவில், களக்காட்டில் வாழைப்பயிர் செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழைத்தார்களை பாதுகாத்து வைக்கும் குளிர்பதன கிடங்கை அரசு சார்பில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரை சந்தித்து, நாங்குநேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சியாளர்கள், அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். முழுமை பெறாமல் கிடக்கும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை 100 சதவீதம் நிறைவேற்றினால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அந்த மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பதால், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்றி தர வலியுறுத்தி மனு கொடுத்தார்.
சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டையில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட விளையாட்டு கிராமம் முழுமையாக செயல்படாமல் முடங்கி போய் கிடக்கிறது. இங்கே பெயரளவிற்கு மட்டுமே நீச்சல் குளம் உள்ளது. இந்த விளையாட்டு கிராமத்திற்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில், வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தருகின்றன. ஆனால் அந்த பறவைகளுக்கு பயன்பட்டு வரும் இங்குள்ள குளத்தில் 2 அல்லது 3 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. மற்ற காலங்களில் குளம் வறண்டு போய் விடுகிறது. இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூந்தன்குளத்தை மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
ஏர்வாடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் ஆகிய கல்லூரிகளும் அரசு சார்பில் அமைத்துத்தர வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்குநேரியில் 30 படுக்கைகளுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரி மட்டுமே இயங்கி வருகிறது. அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே நாங்குநேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை, அனைத்து உயர்தர மருத்துவ வசதிகளும் கொண்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் குக்கிராமங்களையே கொண்டுள்ளது. அந்த கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாமல் இருப்பதால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அடிப்படை வசதிகளை உடனே செய்து தருமாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை நேரில் சந்தித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
Related Tags :
Next Story