கைதான சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
போலீசார் தாக்கியதில் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீசாரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பெத்தநாயக்கன்பாளையம்
போலீசார் தாக்கியதில் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீசாரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் தாக்கியதில் பலி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் (வயது 45). மளிகை வியாபாரி. இவர் கடந்த 22-ந் தேதி தனது நண்பர்கள் சிவன் பாபு, ஜெயசங்கர் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரை சந்தித்து விட்டு மாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாப்பிநாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார், முருகேசனை லத்தியால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் முருகேசன் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து முருகேசனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீது ஏத்தாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதன்பிறகு பெரியசாமிக்கு சேலம் அரசு ஆஸ்பத்தியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை 6 மணிக்கு ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில், மளிகை வியாபாரி முருகேசன் கொலை வழக்கு தொடர்பாக 3 போலீசாரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story