சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் நீர் மட்டம் படிப்படியாக உயர்வு


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் நீர் மட்டம் படிப்படியாக உயர்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 6:12 AM GMT (Updated: 25 Jun 2021 6:12 AM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்காக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் ஏரிகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, 

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சராசரியாக சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. வீதம் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு ஓரளவு பருவ மழை சாதகமாக இருந்ததால் ஏரிகளில் நீர் மட்டம் எதிர்பார்த்த விதத்தில் உயர்ந்தது. அத்துடன் ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கிருஷ்ணா நதி நீரும் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 263 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 592 மில்லியன் கனஅடி, புழலில் 2 ஆயிரத்து 638 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.), கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 419 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 638 மில்லியன் கன அடி (2.6 டி.எம்.சி.) என மொத்தம் 6 ஆயிரத்து 550 மில்லியன் கன அடி (6.5 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 430 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஏரியின் நீர் மட்டம் கடந்த மாதங்களைவிட தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுதவிர மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சோழவரம் ஏரிக்கு 32 கன அடி, புழல் ஏரிக்கு 125 கனஅடி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 35 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பூண்டி ஏரியில் இருந்து 264 கன அடியும், சோழவரத்தில் இருந்து 10 கனஅடி, புழல் ஏரியில் இருந்து 158 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 5 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 193 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் ஓரளவு மழை பெய்ததால் ஏரிகளின் நீர் மட்டமும் சற்று உயர்ந்து உள்ளது. குறிப்பாக பூண்டி நீ்ர் தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதியில் 39 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 15 மில்லி மீட்டர், புழல் பகுதியில் 18 மி.மீ., கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகையில் 10 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 6 மி.மீ. மற்றும் தாமரைப்பாக்கம் பகுதியில் 43 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 14 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது.

தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் 6 மாதத்திற்கு போதுமானதாக உள்ளது. கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர நடப்பாண்டுக்கான பருவ மழையும் நன்றாக இருந்தால் ஏரிகளில் நீர் மட்டத்தை மேலும் உயர்த்த முடியும். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 5 ஆயிரத்து 152 மில்லியன் கன அடி (5.1 டி.எம்.சி.) இருப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story