பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி மும்முரம்


பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:11 PM IST (Updated: 25 Jun 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

கூடலூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் ஊரடங்கால் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்கியது. தொடர்ந்து பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வந்தனர்.

ஆனால் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாத இறுதியில் வகுப்புகள் நிறுத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பாடப்புத்தகங்கள்

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தினமும் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

இயல்பு நிலை...

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் கல்வி மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை என மொத்தம் 61 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பொதுப்போக்குவரத்து ரத்து உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்போதைய சூழலில் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இயல்புநிலை திரும்பிய பிறகு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story