ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம்கேட்டு மிரட்டல். வடமாநில இளம்பெண் மீது போலீசில் புகார்
வேலூர் வாலிபரிடம் முகநூலில் நட்பாக பழகி, ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய வடமாநில இளம்பெண் மீது வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
வடமாநில இளம்பெண்
வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த சிலவாரங்களுக்கு முன்பு முகநூலில் வடமாநில இளம்பெண் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த முகநூல் முகப்பு பக்கத்தில் அந்த பெண் வைத்திருந்த புகைப்படம் ஆண்களை கவரும் வகையில் இருந்துள்ளது. இதைப்பார்த்த அந்த வாலிபர், அந்த பெண்ணின் அழகில் மயங்கி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு தனது முகநூல் நண்பர்களுள் ஒருவராய் மாற்றினார்.
இதையடுத்து அந்த பெண், வேலூர் வாலிபரிடம் மெசேஞ்சர் மூலம் பேசினார். இந்த நிலையில் அந்த பெண், வாலிபரிடம் வாட்ஸ் அப் எண்ணை கேட்டுள்ளார். அந்த பெண் மீதான நம்பிக்கையில் வாட்ஸ் அப் எண்ணை வாலிபரும் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ் அப்பில் சாட் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெண் தனது பேச்சை காமத்தின் பக்கம் கொண்டு சென்றுள்ளார். சபலத்தால் அந்த வாலிபரும் பேசி உள்ளார். இருவரும் வீடியோ காலில் அரட்டை அடித்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் அந்தரங்க விஷயங்களை பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது.
ஆபாச வீடியோ
வீடியோ காலில் பேசும்போது, அந்த வாலிபரின் அந்தரங்க செயல்பாடுகளை அந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்தபெண் தனது முகத்தை மறைத்து நிர்வாண வீடியோ அனுப்பி, வாலிபரிடம் அவருடைய வீடியோவை அனுப்புமாறு கேட்டுள்ளார். இவர் மறுக்கவே வாலிபரின் ஆபாச வீடியோவை அந்த பெண் வற்புறுத்தி பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து அந்த பெண் ரூ.20 ஆயிரம் கேட்டு வாலிபரை மிரட்ட தொடங்கினார். இதன்மூலம் அந்த பெண்ணின் சுயரூபம் அந்த வாலிபருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து அந்த பெண், வாலிபரின் முகநூல் நண்பர்கள் 5 பேருக்கு அவரின் அந்தரங்க வீடியோவை அனுப்பி உள்ளார்.
மேலும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த வீடியோவை அனுப்பி விடுவேன் என்றுகூறி பணம் கொடுக்குமாறு மிரட்டினார். வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் வரை பணம் பேரம் பேசி உள்ளார். பணம் கொடுத்தாலும் மேலும் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டல் விடுக்க வாய்ப்புள்ளதாலும், அந்த பெண்ணுக்கு பின்னால் பணம் பறிக்கும் மர்மகும்பல் இருக்கலாம் என்று கருதியதாலும் பயந்துபோன அந்த வாலிபர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
போலீசில் புகார்
இதனிடையே அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது அந்த பெண், நீ எனக்கு ஆபாசவீடியோ அனுப்பி உள்ளாய். நானும் உன்மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story