இந்து முன்னணி சார்பில் அனைத்து கோவில்களையும் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
கோவில்கள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியதையடுத்து அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று குறைய தொடங்கியதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவில்கள் திறக்கப்படவில்ைல.
இந்த நிலையில் அனைத்து கோவில்களையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் முன்பு இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில், நகர தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களும் உடனடியாக திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
ஆரணி-தேவிகாபுரம்
ஆரணி நகர இந்து முன்னணி சார்பில், கோவில்களை திறக்க வலியுறுத்தி ஆரணி கோட்டை கைலாசநாதர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்கள் கற்பூரம் ஏற்றி கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் முன்பும், பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரியாத்தம்மன் கோவில் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஐந்து நபர்கள் வீதம் கலந்து கொண்டனர். இதேபோல காமக்கூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கோவில் முன்பாகவும் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியின் சார்பாக இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கத்தில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story