ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் 2-ம் பாகம் கண்டுபிடிப்பு


ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் 2-ம் பாகம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 12:14 AM IST (Updated: 26 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

மாளிகைமேடு அகழாய்வு பணியில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் 2-ம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

மீன்சுருட்டி:

அகழாய்வு பணி
தமிழக தொல்லியல் துறை மூலம் 2020-21-ம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் 7 மாவட்டங்களில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்த உள்கோட்டை அருகே உள்ள மாளிகைமேடு என்னும் பகுதியிலும் அகழாய்வு பணிகள் தொடங்க அறிவிக்கப்பட்டது.
இதைெயாட்டி மாளிகைமேடு மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களை தொல்லியல் துறையினர் பார்வையிட்டு, அகழாய்வு பணிகள் மேற்கொள்ளும் இடங்களை தேர்வு செய்தனர்.
பழங்கால பொருட்கள் கிடைத்தன
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த பணிகளின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்தன.
அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் தென்பட்டது.
அரண்மனையின் 2-ம் பாகம்
இந்நிலையில் கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கின.
இதைத்தொடர்ந்து அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் அரண்மனையின் மற்ற பாகங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
அரிய பொக்கிஷங்கள் கிடைக்க வாய்ப்பு
மேலும் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில்தான் அரண்மனை அமைத்து இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் தற்போது அரண்மனையின் 2-வது பாகம் கிடைக்கப் பெற்று இருப்பது சோழர்களின் வரலாற்று சுவடுகளை உறுதி செய்கின்றன. மேலும் சோழர்களின் வரலாற்று அரிய பொக்கிஷங்கள் இன்னும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Next Story