தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு தற்காலிக நிறுத்தம்
தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு
நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் 5 கோடிக்கு மேலான முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. இதனிடையே கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜ் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக சோயா, கம்பு, கடலை புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்பட கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 480 காசுகள் செலவாகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்காலிக நிறுத்தம்
தொடர்ந்து கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் சில கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி செய்யக்கூடிய கோழிக்குஞ்சுகளின் வளர்ப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக இருந்தது. நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் 525 முதல் 550 காசுகளுக்கு முட்டை விற்பனை செய்தால் தான் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்ந்த பிறகே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு மீண்டும் தொடங்கும். அதேபோல் கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story