திருப்புவனம் வைகை ஆற்றில் நீர் வரத்து


திருப்புவனம் வைகை ஆற்றில் நீர் வரத்து
x

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருப்புவனம் வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

திருப்புவனம்,ஜூன்.
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருப்புவனம் வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
படுகை அணை
திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் மேல்புறம் வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.1 கோடி செலவில் படுகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்தப் படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 
வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்டங்களுக்கு நீர் ஆதாரம் அதிகமாக கிடைத்து வரும். வைகையாற்றில் ஈரப்பதம் இருப்பதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்த 2 தினங்களில் திருப்புவனம் படுகை அணைக்கு தண்ணீர் வந்துவிடுகிறது. முன்பு இருந்த காலங்களில் வைகை அணையில் தண்ணீர் திறந்தால் திருப்புவனம் பகுதிக்கு வர சுமார் 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். 
தண்ணீர் வந்தது
வைகை ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றால் இரு கரை ஓரங்களில் உள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள், மற்றும் கிணற்று பகுதிகளில் நீர்மட்டம் உயரும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆற்றுப்படுகை வழியாக வந்த தண்ணீர் நேற்று காலை திருப்புவனம் படுகை அணையை தாண்டி நிரம்பி வழிந்து ஒடியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story