போலீஸ் தாக்கியதில் இதயத்தில் ரத்தம் உறைந்ததால் வியாபாரி உயிரிழந்தார்
போலீஸ் தாக்கியதில் இதயத்தில் ரத்தம் உறைந்ததால் மளிகை வியாபாரி உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் அந்த பகுதியில் மளிகை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 22-ந்தேதி கருமந்துறை பகுதிக்கு அவரது நண்பர்கள் சிவன்பாபு, ஜெய்சங்கர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த முருகேசனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி லத்தியால் முருகேசனை சரமாரியாக தாக்கினார். அப்போது அவர் ரோட்டில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை நண்பர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் பெரியசாமி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முருகேசன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இதயத்தில் ரத்தம் உறைந்ததால் மயங்கி விழுந்த அவர் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, முருகேசனின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. குறிப்பாக தொடை, மார்பு பகுதியில் காயம் உள்ளது. நுரையீரல் மற்றும் இதயத்தில் ரத்தம் உறைந்து உள்ளது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. மயங்கி விழுந்ததில் அவருக்கு பின்தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது என்றனர்.
நுரையீரல், இதயத்தில் ரத்தம் உறைந்ததால் முருகேசன் இறந்து இருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மளிகை வியாபாரி முருகேசன் இறப்பதற்கு முன்பு சோதனைச்சாவடியில் ஏற்பட்ட தகராறு குறித்தும், அவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் விதம் குறித்தும் தற்போது புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், முருகேசனுடன் வந்த ஒருவர், சோதனைச்சாவடியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது சற்று தொலைவில் வியாபாரி முருகேசன், சாலையில் தடுமாறி கொண்டு மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும், அதன்பிறகு சோதனைச்சாவடி அருகே முருகேசன் வந்தபோது இருக்கையில் இருந்து எழுந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வியாபாரி முருகேசனை லத்தியால் தாக்குவதும் பதிவாகி உள்ளது.
அப்போது முருகேசனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒரு போலீசார் கூறுகிறார். மேலும் அந்த வீடியோவில், சாலையில் நின்றபடி தடுமாறும் முருகேசன், போலீசாரிடம் விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். ஆனால் போலீசார் அவரை லத்தியால் அடித்ததால், சாலையில் தடுமாறி கீழே விழுகிறார். அதன்பிறகு அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் முருகேசனுடன் வந்த 2 பேரும் ஆவேசம் அடைந்து செல்போனில் போலீசாரை படம் பிடிக்கின்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று தெரிவிக்கின்றனர். அப்போது மற்றொரு இடத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் நடக்கும் சம்பவத்தை படம் பிடிப்பதும் பதிவாகியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் கொண்டு வரும்படி கூறுகிறார். ஆனால் சிறிது நேரத்தில் முருகேசனுடன் வந்த 2 பேர் தங்களது கட்சியை சேர்ந்த நிர்வாகியிடம் செல்போனில் பேசுவதும் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story