முக்கூடல் அருகே தொழிலாளி கொலை; வாலிபர் கைது
முக்கூடல் அருகே தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45), அவரது சகோதரர் மாரியப்பன் (50). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த சப்பானி என்பவரிடம் பணம் கொடுத்து ஒத்திக்கு நிலத்தை எடுத்து பயிரிட்டு வந்துள்ளனர். இதற்கிடையே, சப்பானி சமீபத்தில் இறந்தார்.
இதனால் சப்பானியின் மகன் ராசுகுட்டி (35), கணேசனிடம் சென்று எனது தந்தையிடம் கொடுத்த பணத்திற்கு குறிப்பிட்ட நிலத்தையும் தாண்டி கூடுதலாக எப்படி பயிர் செய்ய முடியும்? என கேட்டுள்ளார். இதுதொடர்பாக ராசுகுட்டிக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராசுக்குட்டிக்கு ஆதரவாக அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த கண்ணன் என்பவரும் வந்ததால் நேற்று முன்தினம் அவர்களுக்குள் கைகலப்பானது.
இதில் கணேசன், கண்ணன் ஆகியோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கணேசனுக்கு ஆதரவாக உறவினரான நாராயணன் செயல்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று காலை நாராயணனின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சமுதாய திருமண மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நாராயணன் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்ைத கைவிட்டனர்.
கொலையுண்டவரும், கொலையாளிகளும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர்பாக பாப்பாக்குடி அருகே உள்ள புதுக்கிராமம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story