2 டிரான்ஸ்பார்மர்களில் செம்பு கம்பிகள், 200 லிட்டர் ஆயில் திருட்டு


2 டிரான்ஸ்பார்மர்களில் செம்பு கம்பிகள், 200 லிட்டர் ஆயில் திருட்டு
x
தினத்தந்தி 26 Jun 2021 2:06 AM IST (Updated: 26 Jun 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

2 டிரான்ஸ்பார்மர்களில் 200 கிலோ செம்பு கம்பிகள் 200 லிட்டர் ஆயில் திருட்டு போனது. இரவில் மின் இணைப்பை துண்டித்து விட்டு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

சேலம்
2 டிரான்ஸ்பார்மர்களில் 200 கிலோ செம்பு கம்பிகள், 200 லிட்டர் ஆயில் திருட்டு போனது. இரவில் மின் இணைப்பை துண்டித்து விட்டு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
டிரான்ஸ்பார்மர்கள்
வீராணம் அருகே நடந்த இந்த துணிகர திருட்டு பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் வீராணம் அருகே சுக்கம்பட்டி காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதில் ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து சுமார் 200 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்னொரு டிரான்ஸ்பார்மரில் இருந்து சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த 2 டிரான்ஸ்பார்களிலும் திடீரென மின்தடை ஏற்பட்டது. காலை வரை மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை என்றதும், இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அதிர்ச்சி
மின்வாரிய அதிகாரிகள் மின்இணைப்பை சரிசெய்வதற்காக ஊழியர்களுடன் 2 டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, டிரான்ஸ்பார்மரில் இருந்த 200 கிலோ செம்பு கம்பிகள், 200 லிட்டர் ஆயில் ஆகியன திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து மின்வாரிய உதவி என்ஜினீயர் மகேந்திரவர்மன், வீராணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.
கும்பல் கைவரிசை
போலீஸ் விசாரணையில், டிரான்ஸ்பார்மர்களில் திருடுவதற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏதோ சரக்கு வாகனத்தை கொண்டு வந்து அதில் செம்பு கம்பிகளை ஏற்றி உள்ளனர். மேலும் கேன்கள் கொண்டு வந்து அந்த கேன்களில் ஆயிலை அடைத்து அதனையும் அந்த சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் இருந்த இடம் காட்டுப்பகுதி என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்தே, மின்தடையை ஏற்படுத்தி விட்டு சாவகாசமாக இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மின்வாரிய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story